கண்காணிப்புப் பணி

top

ஊழலைக் கையாளுதல்

Handling of Corruption

ஊழலை ஒழிக்க மற்றும் கண்காணிக்க என இரண்டு முறைகளில் ஊழல் நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரப்பெற்ற புகார்கள், நம்பகத் தன்மையுள்ள தகவல்கள், வருமான வரி கணக்குகளின் ஆய்வு, அசையாச் சொத்து கணக்குகள் மற்றும் சொத்து வரி, பரிசு வரி மற்றும் மறைமுக வரி அறிக்கைகள் மூலம் ஊழல்கள் நடைபெறுவதை கண்டறியப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் உள் தணிக்கை மற்றும் சட்டப்பூர்வ தணிக்கைக்கு உட்பட்டதாகும். அத்தகைய தணிக்கை அறிக்கைகள் ஊழல் இனங்களைப் புலப்படுத்தும். இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் போன்ற அரசமைப்பு அமைப்புகளும் மதிப்பீட்டு குழு, பொது கணக்கு குழு மற்றும் பொது நிறுவனங்கள் குழு ஆகிய சட்டமன்ற குழுக்களும் ஒவ்வொரு துறையின் / பொது துறை நிறுவனங்களின் செயல்பாடுகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து அனைத்து. பரிவர்த்தனைகளிலும் நேர்மையுடன் செயல்பட வழிவகை செய்கின்றன, இந்த அறிக்கைகளை கூர்ந்தாய்வு செய்வது ஊழல் இனங்கள் கண்டறியப்பட்டு ஊழல் வழக்குகளை தொடங்குவதற்கும் வழி வகுக்கிறது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்ககத்தால் பின்வரும் ஊழல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொறிவைத்து பிடிக்கும் வழக்குகள்

Trap

நிர்வாகத்தின் உயர்மட்ட அளவிலான, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இது மிகவும் பயனுள்ளதொரு கருவியாகும்; ஏனெனில், இவ்விவகாரத்தில் ஈடுபட்டுள்ள ஊழல் செய்த அரசு பணியாளர் மீது உடனடி தாக்கம் ஏற்படுத்துவதோடு ஊழல் செய்வதிலிருந்து மற்றவர்களையும் தடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட அரசு ஊழியர் தனது அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது அதை செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் கேட்கிறார் என்று புகார் வரப்பெற்று, அத்தகைய லஞ்சத் தொகையை அவர் பெறும் நேரத்தில், குறிப்பிட்ட அந்த அரசு ஊழியரைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு பொறி வைக்கப்படும். புகார்தாரரின் புகாரின் உண்மைத் தன்மையையும் புகார் அளிக்கப்பட்ட அரசு பணியாளரின் நடத்தையை பொறிவைத்து பிடிப்பதற்கு முன்னரே சரிபார்த்த பின்னர் சார்பற்ற சாட்சியங்களின் முன்னிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்ககத்தின் அலுவலர்கள் அவர்களை பிடிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர். அவரை பிடிப்பதற்கான நடவடிக்கை செயற்படுத்தப்பட்டவுடன், அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்ற நடவடிக்கை தொடரப்படும். இந்த நடவடிக்கையில் பங்கேற்கும் புகார்தாரருக்கு இச்சட்டம் ஊக்கமளிக்கும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்ககத்தின் விசாரணை அலுவலரின் அறிவுறுத்தலின்பேரில், சந்தேகத்திற்கு உள்ளான அலுவலரிடம் புகார்தாரர் அவர் கேட்ட தொகையை அல்லது பொருளை அளிக்க வேண்டும்.

வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் குவிப்பு /
குற்றவியல் நடத்தை

DPAssets

பொதுவாக ஊழல் நடவடிக்கைகள் கூட்டாகச் செய்யப்படுவதால், அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து புகார் அளிக்க பலர் முன்வருவதில்லை. அத்தகைய ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ஒரே மாற்று வழி அவர்களின் சொத்துகளைப்பற்றி விசாரிப்பதுதான். மூத்த அதிகாரிகள் நேரடியாக பணம் பெறுவதில்லையாதலால், அவர்களைச் சிக்க வைப்பது கடினம். மறுபுறம், அவர்கள் இலஞ்சமாக பெற்ற பணத்தை அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த முறையில், நேர்மையற்றவர் என்று பொதுமக்களிடம் அவர் பெயர் பெற்றுள்ளதன் அடிப்படையில், ஒரு அரசு ஊழியர்மீது இலக்கு வைக்கப்படுகிறது. இந்த விசாரணையில், சந்தேகத்திற்குரிய அரசு ஊழியரின் சொத்துக்கள், ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் சட்டபூர்வமாக அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு மாறாக உள்ள சொத்துக்களைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம் ஆகிய ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்ட முக்கிய வழக்குகளில், நீதிமன்ற ஆணைகளின் மூலம் அரசிடம் மேற்கண்டவாறு வருமானத்திற்கு அதிகமாக ஈடுபட்டதாக கண்டறிப்பட்ட சொத்துக்கள் இணைக்கப்படுகின்றன. வழக்கு வெற்றியடைந்த பின்னர், வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் வழிவகை உள்ளது.

தவறான அதிகார பிரயோகம் /
குற்றவியல் தவறான நடத்தை

Abuse of Authority

அரசு ஊழியர் தவறான அதிகார பிரயோக செயல்களில் ஈடுபடும் நேர்வுகளை விசாரணை செய்வதன் வாயிலாகவும் ஊழல்கள் கண்டறியப்படுகிறது. அரசு ஊழியர்களால், அவருக்கோ அல்லது வேறு யாரேனும் ஒருவருக்கோ பண ஆதாயத்திற்காக இத்தகைய தவறான அதிகார பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் மதிப்பிடப்படுகிறது. ஒப்பந்தங்கள், வழங்கல் ஆணைகள், கொள்முதல் ஆணைகள் முதலியவற்றை வழங்கியது தொடர்பான கோப்புகளிலிருந்து அத்தகைய விசாரணைக்கான ஆவணங்கள் சேகரிக்கப்படும். பொதுவாக யாதொரு நியாயமான காரணம் இன்றி குறைந்த ஏலப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டது தெரிந்தே குறைந்த தரத்திலான பொருட்களை ஏற்றுக்கொண்டது, வரி அமலாக்க அதிகாரிகளோடு இணைந்து தனி நபர்கள் / நிறுவனங்களால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது முதலிய நிகழ்வுகள் இத்தகைய பகுதியின் கீழ் வரும். தனிநபருக்கான பண ஆதாயத்துடன் தவறான அதிகார பிரயோகமும் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் கோப்புகளின் ஆய்வு வெளிப்படுத்தினால், சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது முறையான பதிவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.