2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டுக்கான ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகிய சட்டங்களுக்கு எதிரான சதித்திட்டம் அல்லது குற்ற செயலகளுக்கு ஆதரவளித்தல் அல்லது தூண்டுதல் போன்ற குற்றச்செயல்களுக்கு எதிரான விசாரணைகளை செயல்படுத்துவது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் பொறுப்பாகும். அரசு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து குற்றங்களும் காவல் துறையால் விசாரிக்கப்படும்.
குற்றங்கள் இரண்டு பிரிவுகளிலும் சம்பந்தப்பட்டதாக இருக்கும் நேர்வில், முக்கிய குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அல்லது காவல் துறை விசாரணையை கையாளும்.
டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து குற்றங்களையும் விசாரிப்பதற்கு மத்திய புலனாய்வுக்குழு (CBI) அதிகாரம் பெற்றுள்ளது.
மத்திய புலனாய்வுக் குழுவின், நிருவாக ஏற்பாட்டின் கீழ், மாநில அரசின் சில பணியாளர்களும் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் எனும் நிலையில் மத்திய அரசு பணியாளர்கள் அல்லது மத்திய அரசு தொடர்புடைய விவகாரங்களின் மீதான குறிப்பிடத்தக்க மற்றும் இன்றியமையாத வழக்குகளை புலனாய்வு செய்யவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. மத்திய புலனாய்வுக் குழு மாநில காவல்துறைக்கு நிலைமையைத் தெரிவித்த பின்னர் மாநில காவல்துறை விசாரணைக்கு தேவையான உதவிகளை வழங்கும்.
அதேபோல, மத்திய அரசின் சில பணியாளர்களும் வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் எனும் நிலையில் மாநில அரசு பணியாளர்களர்கள் அல்லது மாநில அரசு தொடர்புடைய விபரங்கள் மீதான குறிப்பிடத்தக்க மற்றும் இன்றியமையாத வழக்குகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் உள்ளிட்ட மாநில முகமைகள் மேற்படி வழக்குகளை விசாரிக்கும். இருப்பினும், விசாரணையின்போது, மத்திய அரசு அதிகாரிகளின் தலையீடு குறித்த தகவலை, மத்திய புலனாய்வுக் குழுவுக்கு மாநில முகமை தெரிவிக்கும். தேவைப்படுமாயின், மாநில முகமைக்கு தேவையான உதவிகளை மத்திய புலனாய்வுக் குழு அளிக்கும்.