ஊழல் தடுப்பு இயக்குநரகத்தின் கடமைகள்

மிக மோசமான நோய்
இன்றைய உலகில் ஊழல்
அதற்கான சிகிச்சை :
வெளிப்படைத்தன்மை

பொது நிருவாகத்தில் ஊழலை எதிர்கொள்வதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையாக, 26.03.1964 அன்று, தமிழ்நாடு அரசு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தை தனி துறையாக அமைத்தது. இது 05.05.1978 வரையில் தற்காலிக அடிப்படையில் செயல்பட்டது, அதன்பின்னர் நிரந்தரமாக்கப்பட்டது. இத்துறை, காவல்துறை தலைமை இயக்குநர் / காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் பதவித்தரத்திலுள்ள இயக்குநர் ஒருவரின் தலைமையின் கீழ் செயலாற்றுகிறது. காவல்துறை தலைவர் பதவித்தரத்திலுள்ள இணை இயக்குநர் ஒருவரும், காவல்துறை துணைத்தலைவர் பதவித்தரத்திலுள்ள துணை இயக்குநர் ஒருவரும் இயக்குநருக்கு உதவுகின்றனர். அவர்கள் ஊழல் தடுப்பு பணியின் அனைத்து கூறுகளையும் ஒருங்கிணைத்து, முக்கிய விசாரணைகளை மேற்பார்வையிடுகின்றனர்.

சென்னை நகர சரகம், வடக்கு சரகம், மத்திய சரகம், தெற்கு சரகம் மற்றும் மேற்கு சரகம் ஆகிய 5 சரகங்களில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளில் பரவலாகப் பணிபுரியும் விசாரணை அலுவலர்களின் பணியினை, சென்னையிலுள்ள தலைமையகத்தில் உள்ள 5 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர். இது தவிர, 2 காவல்துறை தலைவர், 1 காவல்துறை கண்காணிப்பாளர், 1 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் 2 காவல்துறை துணை கண்காணிப்பாளர்களை கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னையில் உள்ள தலைமையகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பிரிவும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரின் பொறுப்பின் கீழ் உள்ளது. அவருக்கு, காவல்துறை ஆய்வாளர்கள் தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் பதவித்தரத்தில் உள்ள துணை பணியாளர்களுடன் உதவுகின்றனர். சென்னை நகர பிரிவு–II மற்றும் சென்னை மாநகர சிறப்பு பிரிவின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவியிடங்கள், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பதவியிடமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேற்கூறிய பிரிவுகள் ஐந்து சரகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சரகமும் ஒரு காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பில் செயல்படுகிறது. 5 காவல் கண்காணிப்பாளர்களில், 4 பேர், அவரவரின் சரக எல்லைக்குட்பட்ட பிரிவு அலுவலகங்களின் பணியை மேற்பார்வையிடும் காவல்துறை சரக கண்காணிப்பாளர்களாக பணிபுரிகின்றனர், மீதமுள்ள வடக்கு சரக காவல் கண்காணிப்பாளர் தனது சரக பணியுடன் சேர்ந்து தலைமையக நிருவாகப் பணி தொடர்பாக இயக்குநருக்கு உதவிபுரிகிறார். ஒவ்வொரு காவல்துறை சரக கண்காணிப்பாளர்களின் கீழ் செயல்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பிரிவுகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:

எண் சரகம் பிரிவுகள்
1. சென்னை நகர சரகம் செ.ந.-I, செ.ந.- II செ.ந.- III செ.ந.-IV, செ.ந.-V, செ.சி.பி.-I, செ.சி.பி.-III மற்றும் தலைமையகம்.
2. வடக்கு சரகம் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிபேட்டை, கள்ளகுறிச்சி மற்றும் நிருவாகப் பிரிவு.
3. மத்திய சரகம் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை.
4. தெற்கு சரகம் மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி.
5. மேற்கு சரகம் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல்.
இந்த இயக்குநரகம், ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றங்களிலும் தீர்ப்பாயங்களிலும் வழக்குகளைத் தொடரவும், நடத்தவும், 4 கூடுதல் சட்ட ஆலோசகர்கள், 34 துணைச் சட்ட ஆலோசகர்கள் மற்றும் 6 வழக்குரைஞர்களைக் கொண்ட, சொந்த சட்ட அலுவலர்களை கொண்டுள்ளது.

இந்த இயக்குநரகத்தின் சட்ட அலுவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநகரத்தால் விசாரிக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (மத்திய சட்டம் 49/1988) பிரிவு 3(i) இன் கீழ் நியமிக்கப்படுகிற சிறப்பு நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கத்தக்க அனைத்து வகை வழக்குகளுக்கும் அலுவல்வழி சிறப்பு அரசு வழக்குரைஞர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதற்கும் மற்றும் விசாரணைகள்/புலனாய்வுகளில் உதவுவதற்கும், அரசின் பல்வேறு பொறியியல் துறைகளுடன் தொடர்பைப் பேணுவதற்கும், தலைமையகத்தில் முழு நேர அலுவலராக, செயற்பொறியாளர் / கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் இயக்குநரகத்தில் செயல்பட்டு வருகிறார். மேலும், வழக்குகளின் விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்திற்கு உதவுவதற்காக, ஒரு கைரேகை பிரிவு இயங்கி வருகிறது.

இயக்குநரகத்திற்கு தேவையான காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களை காவல்துறையிலிருந்தும், தொழில்நுட்ப அலுவலர்களை நெடுஞ்சாலைகள்துறை மற்றும் பொதுப்பணித் துறையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்ட ஆலோசகர், துணை சட்ட ஆலோசகர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் பணியிடங்கள், மாநில அரசு பணியிலுள்ள சட்ட அலுவலர்களிலிருந்து பணியமர்த்துதல் அல்லது இயக்குநரகத்தில் உள்ள சட்ட அலுவலர்களிலிருந்து பதவி உயர்வு அளித்தல் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

விழிப்புப்பணி ஆணையரால் குறிப்பிடப்படும் ஊழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு, இயக்குநரகத்தால் திரட்டப்படும் அனைத்துத் தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் ஆணையத்திடம் வழங்குதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் பொதுவான பணியாக இருப்பினும், அதன் முக்கிய பொறுப்புகள் கீழ்கண்டவாறு உள்ளன.

1) லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளைக் கண்டறிவதற்கும், 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் (மத்திய சட்டம் 49, 1988) சட்டத்தின் பிரிவு 7 முதல் 15 வரையுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கும் தகவல்களை திரட்டுதல் மற்றும் 1947 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 161 முதல் 165-A ஆகிய வரம்புகளுக்குள் வருகின்ற, 09.09.1988 ஆம் நாளுக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றங்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தால் விசாரிக்கப்படும்.

2) குற்றவியல் முறைகேடு (லஞ்சம் மற்றும் ஊழல்), குற்றவியல் கையாடல், நம்பிக்கை மீறல் போன்றவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக, பொது மக்கள் அல்லது அரசு, விழிப்புப்பணி ஆணையர் மற்றும் துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் புகார்களை விசாரித்தல்.