ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் பங்கு

விசாரணைகள் / புலனாய்வுகளின் தன்மை

━━━━━━━━━━━━━━━━━━

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம், அலுவல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் மாநில அரசால் நிறுவப்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் கழகங்களைச் சேர்ந்த பணியாளர்களால் நடத்தப்படும் லஞ்சம் அல்லது ஊழல் மற்றும் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து பெறப்படும் புகார்கள்/தகவல்கள் மீது விசாரணைகள்/ புலனாய்வுகளை மேற்கொள்கிறது. பொதுவாக, புகார்கள்/தகவல்கள் மீதான முதல்நிலை விசாரணை, தொடக்க விசாரணை மேற்கொள்ளப்படும்,. முதல்நிலை விசாரணையில், விரிவான விசாரணைக்கு தகுந்த உள்ளடக்கம் உள்ள நேர்வில், விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். முதல்நிலை விசாரணையில் அல்லது விரிவான விசாரணையில் பெறப்படும் தகவல்கள், குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் உள்ள நேர்வில், குற்றவியல் நடைமுறை சட்டம் (1973)ன் 154 ஆம் பிரிவின் கீழ் வழக்கமான வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1973) ன் தொடர்புடைய விதிகளின்படி விசாரணை மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட அரசு பணியாளர் ஒருவர், குறிப்பிட்ட நேர்வு ஒன்றில், அவரது அலுவலகக் கடமையை நிறைவேற்றுவதற்குப் பணம் கோருவதாக நம்ப தகுந்த உறுதியான தகவல் கிடைக்கப்பெறும்போது, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 154 ஆம் பிரிவின் கீழ் கோரப்பட்டுள்ளவாறு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் செய்ததற்கான வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக பணம் பெறுகின்ற நேர்வில், குற்றம் சாட்டப்பட்டவரை பொறிவைத்துக் கையும் களவுமாக பிடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

DVAC – காவல் நிலையமாக அறிவிக்கப்படுதல்

━━━━━━━━━━━━━━━━━━━

இயக்குநரகத்தின் தலைமையகம், முழு மாநிலத்தின் மீதும் அதிகார வரம்பு கொண்ட ஒரு காவல் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநரகத்தில், காவல்துறை ஆய்வாளர் மற்றும் அதற்கு மேலான பதவியிலுள்ள அனைத்து காவல்துறை அலுவலர்களும், 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 2/1974) 2(s) பிரிவின் கீழ், காவல் நிலையத்தின் பொறுப்பு அலுவலருக்கான அதிகாரங்களைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநரகத்தின் அனைத்துப் பிரிவுகளும், அந்தந்த மாவட்டங்களின் எல்லைகள் முழுவதற்கும் அதிகார வரம்பைக் கொண்ட காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புலனாய்வு மற்றும் கைது அதிகாரங்கள்

━━━━━━━━━━━━━━━━━

09.09.1988 ஆம் ஆண்டுக்கு முன்னர் செய்யப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக, நேர்விற்கேற்ப, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் (மத்திய சட்டம் 49/1988) அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 161, பிரிவு 165 அல்லது பிரிவு 165-A அல்லது 1947 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் தண்டனை வழங்கத்தக்க யாதொரு குற்றம் தொடர்பாகவும் புலனாய்வு செய்வதற்கு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 49/1988) 17ஆம் பிரிவின் முதலாவது விதியின் கீழ், விசாரணை மற்றும் கைது செய்வதற்கான அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு இவ்வியக்ககத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், A மற்றும் B குழுவினைச் சேர்ந்த யாதொரு அலுவலரையும், பிடியாணையின்றி கைது செய்வதற்கான அதிகாரம் மேற்சொன்ன காவல் ஆய்வாளர்களுக்கு கிடையாது.