முதற்கட்ட விசாரணை
ஒரு புகார்/தகவல் குறித்த முதல் விசாரணை என்பது முதற்கட்ட விசாரணையின் (PE) தன்மையில் உள்ளது. முதற்கட்ட விசாரணை சாட்சியங்களை தொடர்பு கொண்டும், ஆதாரங்கள் வாயிலாக துறை சார்ந்த பதிவுகளை ஆய்வு செய்தும் நடத்தப்படுகிறது. முதற்கட்ட விசாரணை அல்லது பெறப்பட்ட புகார், மேல் நடவடிக்கைக்கு தகுதியான போதிய தகவலை கொண்டிருக்கும் நேர்வில், விரிவான விசாரணை (DE) அல்லது பதிவுறு வழக்கு (RC) பதிவு செய்யப்படும்.
விரிவான விசாரணை
ஒரு விரிவான விசாரணையில், சாட்சிகளின் வழக்கமான விசாரணை மற்றும் ஆவணங்கள் மற்றும் பதிவுகள் ஆகியவை ஆய்வு செய்யப்படும். இருப்பினும், வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, அத்தகைய விசாரணைகளில் தேவையற்ற விளம்பரம் விரும்பத்தக்கதல்ல. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகான விசாரணை அல்லது தீர்ப்பாயத்தின் முன்பு நடைபெறும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அல்லது பதிவுறு வழக்கு பதிவு செய்வதற்கான நிலையான சான்றுகள் கிடைக்கப்பெறுவதை கண்டறிதல் ஆகியவை விரிவான விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.
பதிவுறு வழக்கு
முதற்கட்ட விசாரணையில் அல்லது விரிவான விசாரணையில் அல்லது கண்காணிப்பு அறிக்கை போன்றவற்றின் மூலம் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் கண்டறியப்படும் நேர்வில், 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 154 ஆம் பிரிவின் கீழ் பதிவுறு வழக்கு (RC) பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.
விசாரணை அல்லது ஒரு வழக்கில் குற்றச்சாட்டுகள் முழுமையாக அல்லது பகுதியாக நிரூபிக்கப்படும் நேர்வில், இயக்குநரகம் அதன் இறுதி அறிக்கையை கண்காணிப்பு ஆணையருக்கு அனுப்பும். விசாரணை/புலனாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் தன்மையைப் பொறுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான தீர்ப்பாயத்தால் விசாரணை மேற்கொள்வதற்கு அல்லது துறை சார்ந்த அதிகாரிகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு அல்லது அடுத்த நடவடிக்கையை எடுப்பதை கைவிடுவதற்கு பரிந்துரைக்கிறது. தேவைப்படும் நேர்வில், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை/புலனாய்வை உறுதி செய்வதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட அரசு பணியாளரை அதிகாரமற்ற முக்கியத்துவம் குறைவான பதவிக்கு பணியிடமாற்றம் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் பரிந்துரைக்கிறது. ஒரு அரசு பணியாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு, அரசு பணியாளரை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு உரிய அதிகாரம் படைத்த அதிகாரியிடமிருந்து இசைவாணை பெற வேண்டும்.